தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய திமுக அரசைவிட கிலோவுக்கு சுமார் ரூ.31 குறைவாகத் தவெக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் ரூ.187.56 கோடி மீதமாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளின்படி, நியாயவிலைக் கடைகளுக்காக ஒரு கிலோ துவரம் பருப்பு சராசரியாக ரூ.77.89 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய திமுக ஆட்சியில் ஒரு கிலோவுக்கு வழங்கப்பட்ட ரூ.109.15 என்ற விலையைவிட சுமார் ரூ.31 (29 சதவீதம்) குறைவாகும்.ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாத காலத்துக்குத் தேவையான 60,000 டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்ய தற்போதைய அரசு ரூ.467.34 கோடி செலவிட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஜூலை முதல் இதே அளவு மற்றும் அதே தரத்திலான பருப்பைக் கொள்முதல் செய்ய முந்தைய அரசு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ரூ.654.9 கோடி வரை செலவிட்டு வந்தது. இதனால் ரூ.187 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. வரும் 9 மாதங்களுக்குரிய அடுத்த 3 டெண்டர்களிலும் இதே குறைந்த விலையில் கொள்முதல் சாத்தியமானால், ஆண்டுக்கு அரசுக்குக் கிடைக்கும் சேமிப்பு ரூ.750 கோடியாக அதிகரிக்கும்.
பணவீக்க உயர்வு மற்றும் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில் உணவுப் பொருட்களின் விலையில் பெரிய சரிவு இல்லாத சூழலில், பருப்பின் கொள்முதல் விலை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருக்க வேண்டிய நிலையில், மாறாக 29 சதவீதம் குறைந்திருப்பது முந்தைய ஆட்சியில் கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறும்போது, "அண்மையில் முடிந்த டெண்டரில் துவரம் பருப்பின் தரம் மற்றும் விவரக் குறிப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நடைமுறைகளின்படியே அனைத்து டெண்டர் விதிகளும் பின்பற்றப்பட்டு 6 நிறுவனங்களுக்குப் பணி ஆணை
வழங்கப்பட்டது, இம்முறை கூடுதல் விநியோகஸ்தர்கள் பங்கேற்றதே, விலை குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.